Thursday, February 7, 2013

ஒரு ஆம்புலன்ஸ் பயண அனுபவம்

போன வாரம் ஒருநாள் இரவு ஏழு மணி சுமார், கிண்டி பாலத்தில் நல்ல டிராபிக் ஜாம். ஒரு ஆம்புலன்ஸ் வழி கிடைக்காமல் தடுமாற, மற்ற ஆட்கள் அனைவரும் எப்படியாவது அந்த ஆம்புலன்ஸுக்கு வழி கிடைக்க போராட, அந்த தருணத்தில் ஆம்புலன்ஸ் உள்ளே இருந்தவர்கள் முகத்தில் அப்படி ஒரு கலவரம். ஒரு பத்து நிமிட போராட்டத்திற்குப் பின் வழி கிடைத்து ஆம்புலன்ஸும் நகர்ந்துவிட, அனைவர் முகத்திலும் அப்படி ஒரு நிம்மதி. நானும் என் குடும்பத்தினர்களும் அப்படி ஒரு மனநிலையில் தான் மூன்று மாதத்திற்கு முன் இருந்தோம்.

போன நவம்பர் மாதம் என் அப்பாவிற்கு உடல் நல கோளாறு ஏற்பட்டு கரூர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தோம். கிட்னி, இருதயம், இரண்டும் பழுதுபட்ட நிலையில் அவரை உடனடியாக கோயம்புத்தூர் குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறிவிட்டார்கள். குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் இருதயப் பிரிவின் தலைமை மருத்துவர் என் அப்பாவின் மாணவர் என்பதால், எங்களால் எளிதில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க முடிந்திருந்தது. ஒரு திங்கட்கிழமை காலையில் ஒரு ஆம்புலன்ஸில் கரூரில் இருந்து கோவைக்கு பயணமானோம்.

கரூரில் இருந்து கோவை சுமார் 134 கி.மீ. ஆம்புலன்ஸில் ஏறிய சிறிது நேரத்திலேயே சைரன் அலற, எங்கள் அனைவருக்கும் தலைக்குள் உலகமே சுத்துவது போல அப்படி ஒரு உணர்வு. ஆம்புலன்ஸ் டிரைவர் நல்ல திறமைசாலி. அதே போல் முன்சென்ற வாகனங்களும் எங்களுக்கு சிரமப்பட்டாவது வழிவிட, 10 கி.மீ எல்லாம் நிமிடத்தில் கடந்தோம்.

வழியெங்கும் எத்தனையோ ஊர்கள், கிராமங்கள். ஆனால் எங்கள் வண்டி கடக்கும் போதெல்லாம் பெரும்பாலான மக்கள் கடவுளை வேண்டியதை பார்த்தேன். யாரென்றே தெரியாத ஒரு உயிர் பிழைக்க கடவுளிடம் வேண்டிய அவர்கள் எல்லாம் என் கண்ணில் கடவுளாய்த் தெரிந்தார்கள். ஆம்புலன்ஸில் வந்த நர்ஸ் இடை இடையே என் அப்பாவிற்கு ப்ரெஷர் பார்த்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கெல்லாம் நாங்கள் ஒண்டிப்புதூரை நெருங்கி விட்டிருந்தோம். அப்பொழுது எங்கள் முன் புல்லெட்'ல் சென்ற ஒருவர் எங்கள் வண்டியின் வேகத்திற்கு போட்டி போட்டு முன்னே சென்று கொண்டிருந்தார். பார்க்க சாப்ட்வேர் என்ஜினியர் போல் இருந்தார். என்னடா இவர் இப்படி வழிவிடாமல் வேகமாக போகிறாரே என்று நினைத்தபோது தான் அவரை நன்றாக கவனிக்க முடிந்தது. மனிதர் எங்களுக்கு முன் போகும் அனைத்து வண்டிகளையும் ஓரம்கட்டி, எங்கள் வண்டி எந்த பிரச்சனையும் இல்லாமல் பின்னால் வருவதற்கு வழி பண்ணிக்கொடுத்துச் சென்று கொண்டிருந்தார். சிங்காநல்லூர் வரை எங்களுக்கு முன் வந்த அவருக்கு என் நன்றிகள் பல.
ஹாஸ்பிட்டலில் அப்பாவை அனுமதித்து கொஞ்ச நேரம் வரைகூட எங்களுக்கு எந்த ஆம்புலன்ஸின் சைரன் சப்தம் மனதிற்குள் கேட்டுக்கொண்டே இருந்தது. ஹாஸ்பிட்டலில் டாக்டர் அப்பா இன்னும் மூன்று நாட்கள் கூட தாங்க மாட்டார், அவருக்கு மருத்துவம் எதுவும் பயனளிக்காது, அவரின் கடைசி ஆசையை பூர்த்தி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு, என் அப்பாவை டிஸ்சார்ஜ் செய்தார்.

இதோ யாரென்றே தெரியாத ஒருவருக்காக பிராத்தித்த அந்த பல முகங்களினால் தான் மூன்று நாட்கள் கூட தாங்கமாட்டார் என்று சொல்லப்பட்ட என் அப்பா, மூன்று வாரத்திற்கு மேல் எங்களுடன் இருந்து கடைசியாக இறைவனடி சேர்ந்தார். என் தந்தைக்காக பிராத்தித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் கோடான கோடி நன்றிகள்.
இன்றும் அடையாறு பாலத்தில் ஒரு ஆம்புலன்ஸ் டிராபிக்'ல் மாட்டிக்கொள்ள, பல நண்பர்கள் அலுவலகம் செல்லும் அவசரத்திலும் அந்த வண்டிக்காக வழிவிட்டு, பிராத்தித்து விட்டு செல்கின்றனர். இவற்றை எல்லாம் பார்க்கும் போதுதான் இன்னும் மனிதம் மக்களிடையே இருக்கிறது என்பது தெளிவாகிறது.

கடவுள் இருக்கான் குமாரு :)

4 comments:

அகல்விளக்கு said...

நல்ல உள்ளங்கள்!!!
நன்றாக இருக்கட்டும்!

:)

Achilles/அக்கிலீஸ் said...

நன்றி அகல்விளக்கு :)

ஸ்கூல் பையன் said...

தங்களது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். முடிந்தால் சென்று பார்க்கவும். நன்றி

http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_17.html

Ranjani Narayanan said...

உங்கள் அனுபவங்களை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். நானும் இதுபோல பிரார்த்திப்பது உண்டு.
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.