Friday, February 17, 2017

தீமை தான் வெல்லும்

தற்போது தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை காண முடிகிறது. இதே சூழ்நிலையில் போனால் அடுத்த 4 ஆண்டுகள் எப்படி இருக்கும். ஒரு ப்ரெடிக்ஷன் இதோ.

1. இடப்பாடி பழனிசாமி MLAக்கள் ஆதரவு பெற்று முதல்வர் ஆவார். ஆனாலும் அவர் தற்காலிக முதல்வர் தான், அதிமுக பார்வையில்.
2. அதிமுக துணை பொது செயலாளர் TTV Dinakaran ஏதாவது ஒரு தொகுதியில் (RK Nagar/Mannargudi) போட்டியிட்டு வெற்றிபெறுவார்.
3. தினகரன் முதல்வாராக பதவி எற்பார். ஏனென்றால் கட்சியின் பொது செயலாளர் தான் முதல்வாராக இருக்கவேண்டும். பொது செயலாளர் சிறையில் இருப்பதால், துணை பொது செயலாளர் முதல்வாராக இருப்பதே உத்தமம்.
4. அவர் முதல்வாராகிய பின் என்ன ஆகும் என நான் சொல்ல வேண்டியதில்லை. மண்னார்குடி மாஃபியாவிற்கு சுபம். நமக்கு???

#தீமை_தான்_வெல்லும்

Thursday, February 16, 2017

துவாலு'வும் தமிழ்நாடும்

துவாலு என்றொரு தேசம். பசிபிக் பெருங்கடலில், ஆஸ்திரேலியாவுக்கும் ஹவாய் தீவுக்கும் நடுவில் பாலினேசியா என்ற பகுதியில் அமைந்துள்ளது. அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 10000 தான். துவாலுவின் Internet Top Level Domain (TLD) code ".TV"

ஆக அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு பெரும் வரவை ஈட்டும் தொழில்கள்: மீன்பிடி உரிமம், துவாலு டிரஸ்ட் ஃபண்டு மற்றும் ".TV" Internet Top Level Domainஐ லீஸுக்கு விட்டு அதில் கிடைக்கும் ராயல்டி.

.TV என்பதால் பல டிவி சானல்கள் போட்டி போட்டுக் கொண்டு பணம் தருகின்றனர். இவற்றை மேனேஜ் செய்வது Verisign என்ற கம்பெனி.

அந்த ராயல்டியில் கிடைக்கும் பணம் எவ்வளவு தெரியுமா? வருடத்திற்கு 2.2 மில்லியன் டாலர்கள். அந்த நாட்டின் மொத்த வருவாய்'ல் 10%

சரி இப்போ இது எதற்கு என்கிறீர்களா? நீங்கள் எவ்வளவு சிறியவர் ஆனாலும் உங்களிடம் ஒரு முக்கிய விஷயம் இருக்கும். அது சிலருக்கு மிகப்பெரிய லாபபத்தை கொடுக்கும். சிலரின் வாழ்க்கையை கூட மாத்தி அமைக்கும்.

விஷயத்திற்கு வருவோம். நம்மிடம் அப்படி என்ன முக்கிய பொருள் உள்ளது?? தெரியவில்லையா?? - அதுதான் உங்கள் வாக்கு. ஆம் நீங்கள் தேர்தலில் செலுத்தும் வாக்கு.

இப்போது தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை. இன்னும் 15 நாட்களில் கவர்னர் இன்று பொருப்பேற்றுள்ள முதல்வர் எடப்பாடி பெரியசாமியிடம் மெஜாரிட்டி காமிக்க கோரியுள்ளார். ஆக மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் எலெக்ஷன் வரும்.

இப்போதாவது புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுங்கள். யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே வாக்ககளியுங்கள். நாடு நாசமாய் போனால் நமக்கென்ன. நமக்கு காசு தான் முக்கியம்.

ஆனால் ஒரு கண்டிஷன். காசு வாங்கிட்டு ஓட்டு போட்ட பின் அரசியல்வாதிகளை விமர்சிக்க கூடாது. அதற்கு நீங்கள் தகுதி அற்றவர். மேல் வாயையும் ஆசனவாயையும் பொத்திக்கொண்டு இருக்கவேண்டும். புரியவில்லை என்றால் செய்திகளை பாருங்கள். புரியும்.

வாழ்க தமிழ்.

Thursday, February 28, 2013

இந்திய கிரிக்கெட் - ஐபிஎல்'க்கு முன் ஐபிஎல்'க்கு பின்

ஐபிஎல் வந்தவுடன் இந்திய கிரிக்கெட்டே மாறிவிட்டது எனலாம். அதுவும் சமீபத்தில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணிலேயே மண்ணைக் கவ்வுவதற்கு ஐபிஎல்'லும் ஒரு காரணம்தான். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு முறையை, ஐபிஎல்'க்கு முன் மற்றும் ஐபிஎல்'க்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம்.

முதலில் எல்லாம் இந்திய அணியில் இடம்பெற தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்கும் அளவுக்குப் போராடவேண்டும். முதலில் ரஞ்சிக் கோப்பையில் குறைந்தபட்சம் ஒரு நான்கு சதங்களாவது விளாச வேண்டும். அப்புறம் இளம் வீரர்கள் U-19, U-21 உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் நன்றாக சோபிக்க வேண்டும். இதெல்லாம் நடந்தால் உங்களுக்கு கிரிக்கெட் அணியின் பதினைந்து நபர் பட்டியலில் பெயர் வரலாம். அதற்கு நடுவிலும் பல அரசியல்கள் இருக்கும். ஏற்கனவே அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்களோ இல்லையோ, அவர்கள் பெயரை அப்படியே நீக்காமல் வைத்திருப்பார்கள். நீங்கள் அணிக்கு வர எவ்வளவு சிறப்பாக விளையாடிணீர்களோ, அதே அளவு படுமோசமாக விளையாடினால் தான் பழைய வீரர்களின் பெயர்கள் நிராகரிக்கப்படும் வாய்ப்புகளும்.

ஆனால் ஐபிஎல் வந்தவுடன் எல்லாமே மாறிவிட்டது. டீம் ஓனர்கள், இளம் வயது வீரர்களை எளிமையாகப் பெற முடிந்தது. இளம் வயது வீரர்களுக்கு காசும் கம்மி. அதேபோல வீரர்களும் ஐபிஎல்'லை விரும்பிகிறார்கள். அவர்களுக்கு ஐபிஎல்'லில் காசு சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம், மக்களால்/கிரிக்கெட் சங்கத்தால் கவனிக்கப்படும் வாய்ப்புகளும் அதிகம்.

இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் ஒவ்வொருவரும் பிரிந்து தங்கள் லோக்கல் ஐபிஎல் அணிக்காக விளையாடும் போது, அங்குள்ள இளம் வீர்களின் ஆட்டத்தையும், ஸ்பெஷாலிட்டியையும் நன்கு கவனிக்க முடிகிறது. அவர்களுக்குள்ளான நட்பும் பலம் பெறுகிறது. இதனால் இப்போது எந்த ஒரு சீனியர் பிளேயரும், கிரிக்கெட் அணி அறிவிப்பு வரும் போது நிம்மதியாக இருக்க முடியாது. தங்கள் பெயர் இருக்குமோ இல்லையோ என வயித்தில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் இருக்கவேண்டிய நிலை.

சமீபத்திய இந்திய-இங்கிலாந்து தொடராகட்டும், இந்திய-பாக்கிஸ்தான் தொடராகட்டும், ஏன் தற்போது நடைபெறும் இந்திய-ஆஸ்திரேலியா தொடராகட்டும், சென்னை ரசிகர்கள் அனைவரும் இது சிஎஸ்கே மேட்ச் என்று கூறும் அளவுக்கு, சிஎஸ்கே அணி வீரர்கள் மட்டும் நன்றாக விளையாடுவதைக் காண முடிகிறது. இதற்கு தோனியும் ஒரு முக்கிய காரணம். சிஎஸ்கே வீரர்களை அவரால் எளிதில் பயன்படுத்த முடிகிறது. சிஎஸ்கே வீரர்களுக்கு இந்திய அணியும் ஒரு கம்போர்ட் ஜோன் (Comfort Zone) ஆகவே இருக்கிறது.

அதுவும் தோனி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு வந்தவுடன் தமிழக வீரர்கள் இந்திய அணியில் எளிதாக நுழைய முடிகிறது. முன்பெல்லாம் ஒரு தமிழக வீரர் இருந்தாலே, அதெல்லாம் பெரிய விஷயம். சரி இது நல்ல விஷயம் தானே என்கிறீர்களா?

நல்ல விஷயம் தான், ஆனால் ஐபிஎல் வந்தவுடன் வீரர்களின் ஆட்டப்போக்கே மாறிவிட்டது. நல்ல பேட்ஸ்மேன்கள் கூட ஸ்லாகற்களாக (Slogger) மாறிவிட்டார்கள். உதாரணத்திற்கு நம்ம முரளி விஜய்'யை எடுத்துக்கொள்ளுங்கள். டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாடி வந்த அவர், ஐபிஎல்'லில் விளையாட ஆரம்பித்ததும், இந்திய டெஸ்ட் அணியில் நன்றாக விளையாட முடியவில்லை. ரஞ்சிக் கோப்பை போட்டிகளிலும் தன் திறமையைக் காட்டக் கஷ்டப்படுகிறார்.

இதுதான் பிரச்சனை. ஐபிஎல் வந்தவுடன் ரஞ்சிக் கோப்பையை யாரும் சீந்துவதே இல்லை. இதோ இந்த ரஞ்சி போட்டிகளில் வெளுத்துக் கட்டிய வாசிம் ஜாப்பருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை.

புதிதாக ஒன்று வந்தபிறகு, பழைய விஷயங்களை இழப்பது ஒன்றும் புதிதல்ல. ஐபிஎல் உபயத்தால் நாம் நமது கிரிக்கெட் தரத்தை இழந்துவிட்டோம் என்பதே உண்மை.

Wednesday, February 27, 2013

கணேஷ்-வசந்த்

பிப்ரவரி 27 - இன்று மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு தினம். இவரின் எளிமையான எழுத்து நடையால் என்னைப்போல் பல வாசகர்களைக் கவர்ந்தவர். அதிலும் அவரதுபாத்திரங்களான கணேஷ்-வசந்த் பெரும்பாலானவர்களைக் கவர்ந்தவர்கள். கணேஷின் புத்திக் கூர்மையும், வசந்த்தின் துறுதுறு பேச்சும் எவரையும் எளிதில் கவர்ந்துவிடும்.

கணேஷ்-வசந்த்துக்கு வயதாகாதா என ஒருவர் கேட்டதற்கு சுஜாதா அவர்கள் அளித்த பதில்: "இன்றும் அவர்கள் இளமையாக இருப்பதன் ரகசியம் இதுதான். குற்றங்கள் மாறவில்லை. குற்றங்களைக் கண்டுபிடிக்கும் முறைகள் முன்னேறிவிட்டன. அதற்கேற்ப கணேஷ் வசந்த்தும் தங்களை மாற்றிக்கொண்டு விட்டார்கள்."

குற்றங்களை அலசி ஆராயவும், அதை கண்டுபிடிக்கவும் இருக்கும் முக்கியப் பாத்திரம் லாயராய் இருந்தால் சுலபம் என எண்ணி தான் சுஜாதா அவர்கள் கணேஷைப் படைத்தார். முதலில் வந்த சில நாவல்களில் கணேஷ் தனியாகத்தான் தன் அட்வென்ச்சர்ஸ்'ஐ செய்து கொண்டிருந்தார். பிறகு வசந்த்தும் வந்துவிட, இவர்களது சிந்திக்கும் விதம், வசந்த்தின் குறும்புப் பேச்சு, என கலந்துக்கட்டி இவர்கள் ஒரு செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார்கள்.

சுஜாதா அவர்களின் முதல் நாவல் "நைலான் கயிறு". இந்த நாவலிலேயே கணேஷ் அறிமுகமாகிவிட்டார். அதற்கு அடுத்த வந்த "அனிதா-இளம் மனைவி" நாவலிலும் கணேஷ் மட்டுமே இடம்பெற்றார். வசந்த் தோன்றிய முதல் நாவல் "ப்ரியா". இதிலும் கேஸ்(Case) வந்தபிறகு வசந்த்தை சென்னையிலேயே விட்டுவிட்டு கணேஷ் மட்டும் லண்டன் செல்வார். அதற்குப் பிறகு வந்த நாவல்கள் அனைத்திலும் இருவரும் இணைந்தே செயல்படத் துவங்கினர்.

கணேஷ் மட்டும் தோன்றும் நாவல்கள்

 1. நைலான் கயிறு
 2. அனிதா-இளம் மனைவி
 3. ப்ரியா
கணேஷ்-வசந்த் இனைந்து தோன்றும் நாவல்கள்
 1. ஆ..!
 2. மேற்கே ஒரு குற்றம்
 3. மேலும் ஒரு குற்றம்
 4. மீண்டும் ஒரு குற்றம்
 5. இதன் பெயரும் கொலை
 6. கொலை அரங்கம்
 7. வஸந்த் வஸந்த்
 8. பேசும் பொம்மைகள்
 9. மேகத்தை துரத்தியவன்
 10. யவனிகா
 11. கொலையுதிர் காலம்
 12. நில்லுங்கள் ராஜாவே
 13. ஐந்தாவது அத்தியாயம்
 14. மலை மாளிகை
 15. மறுபடியும் கணேஷ்
 16. ஆயிரத்தில் இருவர்
 17. அம்மன் பதக்கம்
 18. கணேஷ் X வசந்த்
 19. 24 ரூபாய் தீவு
 20. ஓடாதே
 21. நிர்வாண நகரம்
 22. எதையும் ஒரு முறை
 23. காயத்ரி
 24. மூன்று நிமிஷம் கணேஷ்
 25. விபரீதக் கோட்பாடு
சுஜாதா அவர்கள் "காந்தளூர் வசந்த்தகுமாரன் கதை" என்று ஒரு சரித்திர நாவல் எழுதினார். இதில் கணேஷ்-வசந்த் கதாப்பாத்திரம் போலவே கணேசப்பட்டர்-வசந்த்தகுமாரன் என இரு பாத்திரங்கள். இருவரின் செயல்களும் பாவனைகளும் கணேஷ்-வசந்த்தைப் போலவே இருக்கும்.

நான் மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் சில நாவல்கள் விட்டுப்போயிருக்கின்றனவா என எனக்குத் தெரியவில்லை. ஏதேனும் விட்டுப் போயிருந்தால், பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

கணேஷ்-வசந்த்தைப் பற்றி பேசிவிட்டு ஒரு ஜோக் சொல்லாமல் போனால் நல்லா இருக்காது. அதனால் இதோ உங்களுக்காக வசந்த் சொன்ன ஒரு ஜோக்.

"பாஸ், ரெண்டு நாய் நடுரோட்டில் @$#%^ பண்ணிக்கொண்டிருந்ததாம். அதைப் பார்த்த ஒரு சிறுவன் தன் அப்பாவிடம், டாடி அந்த ரெண்டு நாயும் என்ன பண்ணுதுன்னு கேட்டானாம். அவனோட அப்பா கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு, முன்னாடி இருக்கிற நாய்க்கு ஒடம்பு சரியில்லை. அதான் பின்னாடி இருக்கிற நாய் அதை ஆஸ்பத்திரிக்கு தள்ளிக்கிட்டுப் போகுது'னு சொன்னாராம்."

வசந்த் சொன்ன ஜோக்குகளில் கணேஷ் கடுப்பாகாமல் சிரித்த ஒரே ஜோக் இதுவாகத்தான் இருக்கும்.

ஆனா வாத்தியாரே, கடைசி வரைக்கும் மெக்ஸிகோ தேசத்து சலவைக்காரி ஜோக்'க சொல்லாமலே போயிட்டீங்களே :(

பி.கு: கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு சுஜாதா அளித்த பதில்: கடவுள் இருக்கிறாரா என்பது பிரச்சனை இல்லை. கடவுள் தேவைப்படுகிறார்.

வாத்தியாரே, அதேபோல், உங்களைப் போல ஒரு எழுத்தாளர் இருக்கார்களா என்பது பிரச்சனை இல்லை. தேவைப்படுகிறார்கள்.

Monday, February 18, 2013

சென்னையில் ஒரு மழைகாலம்?


தலைப்பை பார்த்த உடனே ஏதோ கதை, கவிதை, விமர்சனம் என யோசிக்காதீங்க. சம்பந்தமே இல்லாம நாலு நாளா சென்னைல அப்போ அப்போ மழை பெய்யுது. இதுக்கு நடுவுல மாட்டிகிட்டு ஆபிஸ் வர கஷ்டப்படும் என்போல் ஆட்களின் மைண்ட் வேர்ட்ஸ் தான் இந்தப் பதிவு.

போன வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து கிளம்பரப்ப நல்லாவே மழை பெய்துகொண்டிருந்தது. 'எப்போவோ வாங்கின ரெயின் கோட்டுக்கு இப்பவாவது வேலை வந்துச்சே' என உள்ளுக்குள் சந்தோஷப்பட்டிருப்பாளோ என்னவோ, என் மனைவி "இன்னைக்கு இதை போட்டுட்டு போங்க" என்றாள். அந்த ரெயின் கோட் வாங்கிய புதுசில் போட்டுப்பார்த்திருக்கிறேன். உள்ளுக்குள் நல்லாவே கொதிக்கும். மழை வந்தால் பரவாயில்லை. இல்லாட்டி?

ஆனால் அந்த ரெயின் கோட் பார்க்க நல்லா இருக்கும். ப்ளாக் கலர்'ல டிராக் சூட் போல ஒரு டிசைனில் கொஞ்சம் கெத்தாவே இருக்கும்னு வெச்சுக்கங்க. அன்று கொஞ்சம் மழை அதிகம் என்பதால் ஒன்றும் தெரியவில்லை. பார்கிங்'லேயே ரெயின் கோட்'டைப் பார்த்துவிட்டு "ஒஹ் சோ நைஸ் யார்" போல பல பார்வைகள். ஆபீசுக்கு வந்து ரெயின் கோட்'டை கழட்டி விட்டு வந்து சீட்டில் உக்காந்த போது, நீ மட்டும் நனையவில்லையா என அனைவருது பார்வையும் என்மேல். கலக்கிட்டடா மச்சி என உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டு அன்றைய தினத்தை கழித்தேன் (வேலையும் பார்த்தேங்க).

ஆனால் இன்று? மழை லேசாக தூறிக்கொண்டிருந்தது. "இன்றைக்கும் ரெயின் கோட் போட்டுக்குங்க" என்றபோது, "ஐயோ ப்ளீஸ்" என மனம் கெஞ்சினாலும், அங்க அவுட்கோயிங் வாய்ஸ் வரவேயில்லை. சரி என மேலே அந்த ரெயின் கோட்'டின் பேன்ட் மற்றும் ஜெர்கின் என அணிந்து கொண்டு நாசா விஞ்ஞானி போலத்தான் வீட்டிலிருந்து கிளம்பினேன். அங்கங்கு ரெண்டு மூன்று ஆபீஸ் கோயர்ஸ் என்போல் வந்த போது "நான் தனி ஆளில்ல" என மனதை அமைதிப்படுத்தினேன்.

ரெண்டு கிலோமீட்டர் கூட வந்திருக்க மாட்டேன். வெயில் சும்மா கொளுத்த ஆரம்பித்தது. சுற்றிப் பார்த்த போது ஒரு பய கூட ஜெர்கின் போட்டுக்கொண்டிருக்கவில்லை. ஜெர்கின் மட்டும் என்றால் ஜிப்பை மட்டும் கழட்டிவிட்டு கெத்தா வந்துவிடலாம். அதற்கும் வழியில்லை. சிக்னலில் நின்றபோது சுத்தி இருப்பவங்க எல்லாம் என்னை ஒரு பார்வை பார்த்தாங்க பாருங்க, ஒரு படத்துல ரஜினி பேன்ட் சர்ட் போட்டுக்கிட்டு சிட்டி'க்கு வரும்போது, பார்ப்பாங்களே, அப்படி ஒரு பார்வை. ஆபீஸை நெருங்கும் போது, என்னைப்போல் ஒருவர், அல்மோஸ்ட் என் லுக்அலைக் காஸ்டியுமில் வர, நண்பேண்டா, என சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.

பார்கிங்கில் வந்து ரெயின் கோட்'டை கழற்றினால், உள்ளே சட்டை என் வேர்வையால் நனைந்திருந்தது. ஜெர்கின் போடாமல் வந்திருந்தால் கூட இவ்வளவு நனைஞ்சிருக்க மாட்டேன். சென்னை வெயிலில் இனியும் நீ ரெயின் கோட் போடுவ?

Friday, February 15, 2013

குழிப் பணியாரம் - அயல் நாட்டு வெர்ஷன்கள்

நம்ம ஊர்ல குழிப் பணியாரம் போல சில வெளிநாட்டு டிஷ்'களும் உண்டு என்பதே எனக்கு பெரிய ஆச்சர்யமான ஒரு விஷயமாக இருந்தது. இங்கே நாம், நம் குழிப் பணியாரத்தின் வெளிநாட்டு வெர்ஷன்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

ஏபல்ஸ்கீவர் (Æbleskiver)

இது டென்மார்க் நாட்டின் பணியாரம். கோதுமை மாவு, பால், கிரீம் அல்லது மோர், முட்டை மற்றும் சர்க்கரை கொண்டு இனிப்பு பலகாரமாக செய்யப்படும் இந்த பதார்த்தம், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெகுவாக செய்து பரிமாறப்படும்.

எக்கெட் (Eggette)

சீனாவின் கண்டோநீஸ் பகுதியான ஹாங்காங், மக்காவ் ஆகிய இடங்களில் இந்த வகை பணியாரங்கள் செய்யப்படுகின்றன. முட்டை, சர்க்கரை, மாவு மற்றும் பால் கொண்டு செய்யப்படும் இந்த எக்கெட், ஹாங்காங் கேக்குகள் என்றும் அழைக்கப்படுகிறது.

போப்பார்டிஸ் (Poffertjes)

இது டட்ச் வகை பணியாரங்கள். நெதர்லாந்த் நாட்டின் பாரம்பரிய உணவான இது, நல்ல குளிர் காலங்களில் சாலை ஒர கடைகளில் சுடச் சுட விற்கப்படுகிறது. கோதுமை மாவில் ஈஸ்ட் கலந்து செய்யப்படும் மாவில் இந்த வகை பணியாரங்கள் சமைக்கப்படுகின்றன. மிகவும் மிருதுவாக இருக்கும் இந்தப் பதார்த்தத்தில் பொடி செய்த சர்க்கரை தூவப்பட்டோ, சிரப் ஊற்றப்பட்டோ பரிமாறப்படும்.

டகோயகி (Takoyaki)

இது ஜப்பான் நாட்டின் ஒருவகை தின்பண்டம். ஜப்பான் பண்டம் என்பதால் அதில் அவர்களது மானே தேனே பொன்மானே (ஆக்டோபஸ், டெம்பூரா) எல்லாம் இந்தப் பணியாரத்தை சமைக்க உபயோகப் படுத்தப்படுகிறது.

இது மட்டும் இல்லாமல் பாப்போவர் (Popover), மப்பின்ஸ் (Muffins), சில வகை பான் கேக் (Pan Cake) எல்லாம் நம் பணியாரம் போன்ற பதார்த்தங்கள் தான். ஆனால் இதற்கு முன்னோடி யார் என்பதுதான் எனது தீர்க்கப்படாத சந்தேகம்.

Thursday, February 7, 2013

ஒரு ஆம்புலன்ஸ் பயண அனுபவம்

போன வாரம் ஒருநாள் இரவு ஏழு மணி சுமார், கிண்டி பாலத்தில் நல்ல டிராபிக் ஜாம். ஒரு ஆம்புலன்ஸ் வழி கிடைக்காமல் தடுமாற, மற்ற ஆட்கள் அனைவரும் எப்படியாவது அந்த ஆம்புலன்ஸுக்கு வழி கிடைக்க போராட, அந்த தருணத்தில் ஆம்புலன்ஸ் உள்ளே இருந்தவர்கள் முகத்தில் அப்படி ஒரு கலவரம். ஒரு பத்து நிமிட போராட்டத்திற்குப் பின் வழி கிடைத்து ஆம்புலன்ஸும் நகர்ந்துவிட, அனைவர் முகத்திலும் அப்படி ஒரு நிம்மதி. நானும் என் குடும்பத்தினர்களும் அப்படி ஒரு மனநிலையில் தான் மூன்று மாதத்திற்கு முன் இருந்தோம்.

போன நவம்பர் மாதம் என் அப்பாவிற்கு உடல் நல கோளாறு ஏற்பட்டு கரூர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தோம். கிட்னி, இருதயம், இரண்டும் பழுதுபட்ட நிலையில் அவரை உடனடியாக கோயம்புத்தூர் குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறிவிட்டார்கள். குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் இருதயப் பிரிவின் தலைமை மருத்துவர் என் அப்பாவின் மாணவர் என்பதால், எங்களால் எளிதில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க முடிந்திருந்தது. ஒரு திங்கட்கிழமை காலையில் ஒரு ஆம்புலன்ஸில் கரூரில் இருந்து கோவைக்கு பயணமானோம்.

கரூரில் இருந்து கோவை சுமார் 134 கி.மீ. ஆம்புலன்ஸில் ஏறிய சிறிது நேரத்திலேயே சைரன் அலற, எங்கள் அனைவருக்கும் தலைக்குள் உலகமே சுத்துவது போல அப்படி ஒரு உணர்வு. ஆம்புலன்ஸ் டிரைவர் நல்ல திறமைசாலி. அதே போல் முன்சென்ற வாகனங்களும் எங்களுக்கு சிரமப்பட்டாவது வழிவிட, 10 கி.மீ எல்லாம் நிமிடத்தில் கடந்தோம்.

வழியெங்கும் எத்தனையோ ஊர்கள், கிராமங்கள். ஆனால் எங்கள் வண்டி கடக்கும் போதெல்லாம் பெரும்பாலான மக்கள் கடவுளை வேண்டியதை பார்த்தேன். யாரென்றே தெரியாத ஒரு உயிர் பிழைக்க கடவுளிடம் வேண்டிய அவர்கள் எல்லாம் என் கண்ணில் கடவுளாய்த் தெரிந்தார்கள். ஆம்புலன்ஸில் வந்த நர்ஸ் இடை இடையே என் அப்பாவிற்கு ப்ரெஷர் பார்த்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கெல்லாம் நாங்கள் ஒண்டிப்புதூரை நெருங்கி விட்டிருந்தோம். அப்பொழுது எங்கள் முன் புல்லெட்'ல் சென்ற ஒருவர் எங்கள் வண்டியின் வேகத்திற்கு போட்டி போட்டு முன்னே சென்று கொண்டிருந்தார். பார்க்க சாப்ட்வேர் என்ஜினியர் போல் இருந்தார். என்னடா இவர் இப்படி வழிவிடாமல் வேகமாக போகிறாரே என்று நினைத்தபோது தான் அவரை நன்றாக கவனிக்க முடிந்தது. மனிதர் எங்களுக்கு முன் போகும் அனைத்து வண்டிகளையும் ஓரம்கட்டி, எங்கள் வண்டி எந்த பிரச்சனையும் இல்லாமல் பின்னால் வருவதற்கு வழி பண்ணிக்கொடுத்துச் சென்று கொண்டிருந்தார். சிங்காநல்லூர் வரை எங்களுக்கு முன் வந்த அவருக்கு என் நன்றிகள் பல.
ஹாஸ்பிட்டலில் அப்பாவை அனுமதித்து கொஞ்ச நேரம் வரைகூட எங்களுக்கு எந்த ஆம்புலன்ஸின் சைரன் சப்தம் மனதிற்குள் கேட்டுக்கொண்டே இருந்தது. ஹாஸ்பிட்டலில் டாக்டர் அப்பா இன்னும் மூன்று நாட்கள் கூட தாங்க மாட்டார், அவருக்கு மருத்துவம் எதுவும் பயனளிக்காது, அவரின் கடைசி ஆசையை பூர்த்தி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு, என் அப்பாவை டிஸ்சார்ஜ் செய்தார்.

இதோ யாரென்றே தெரியாத ஒருவருக்காக பிராத்தித்த அந்த பல முகங்களினால் தான் மூன்று நாட்கள் கூட தாங்கமாட்டார் என்று சொல்லப்பட்ட என் அப்பா, மூன்று வாரத்திற்கு மேல் எங்களுடன் இருந்து கடைசியாக இறைவனடி சேர்ந்தார். என் தந்தைக்காக பிராத்தித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் கோடான கோடி நன்றிகள்.
இன்றும் அடையாறு பாலத்தில் ஒரு ஆம்புலன்ஸ் டிராபிக்'ல் மாட்டிக்கொள்ள, பல நண்பர்கள் அலுவலகம் செல்லும் அவசரத்திலும் அந்த வண்டிக்காக வழிவிட்டு, பிராத்தித்து விட்டு செல்கின்றனர். இவற்றை எல்லாம் பார்க்கும் போதுதான் இன்னும் மனிதம் மக்களிடையே இருக்கிறது என்பது தெளிவாகிறது.

கடவுள் இருக்கான் குமாரு :)