ஜாலியா சில புலம்பல்கள்
உங்களோட கஷ்டங்களை யார் கிட்டயாவது சொன்னா மனசுக்கு கொஞ்சம் திருப்தியாக இருக்கும்னு சொல்லுவாங்க. அதையே கொஞ்சம் காமெடியா, ஜாலியா சொன்னா என்னன்னு தோனிச்சு. இதோ என்னோட சில சமீபத்திய புலம்பல்கள்.
போன வாரம் சனிக்கிழமை, ஆஃபீஸ்ல இருந்து வந்துக்கிட்டு இருந்தேன். ராத்திரி மணி பத்து இருக்கும். மழை லைட்டா தூறிக்கிட்டு இருந்துச்சு. பைக்ல ஒரு ஐம்பது கி.மீ வேகத்துல வரும்போது, திடீர்னு ஒரு நாய் குறுக்கால பாய்ஞ்சுறுச்சு. ஏற்கனவே அந்த நாய், வேற வண்டில அடிபட்ட மாதிரி தான் இருந்துச்சு. அதில்லாம என்னோட நன்பனோட ஜாடைல வேற அந்த நாய் இருந்ததால, சடன் பிரேக் அடிச்சேன். மழை பெய்து ரோடு ஈரம், வந்த வேகத்துல அடிச்ச பிரேக் எல்லாம் சேர்த்து, என்னை பைக்கோட வாரிவிட, பொத்துனு கீழ விழுந்து, ரோட்டுல ஸ்கேட்டிங் எல்லாம் போய் என்னோட டி-சர்ட், ஜீன்ஸ் எல்லாம் நாசம். கீழே விழுந்து மூன்று ரூபாய் ஐம்பது காசு சில்லரைய எண்ணிட்டு, திரும்பி பார்த்தா, தூரத்துல வெகு தூரத்துல ஒன்னு ஓடிகிட்டு இருந்துச்சு, அதுவேற யாரும் இல்லைங்க. என்னை கவுத்துச்சே அதே நாய் தான்.
சனிக்கிழமை அதுவுமா சனி இப்படித்தான் வேலை செய்யனுமானு என என்னோட ராசிய நினைச்சு நொந்துகிட்டு, ரோட்டுல உதவிக்கு வந்த ரெண்டு பேரோட சேர்ந்து வண்டிய தூக்கி ஸ்டார்ட் செஞ்சு கெளம்பினேன். என்ன டைம் ஆகுதுன்னு வாட்ச்சப் பார்த்தா, வாட்ச் நொருங்கி கெடக்குது. ஐய்யய்யோ, அப்போ மொபைல் என்ன ஆச்சுனு பார்த்தேன். நல்ல வேளை, நோக்கியா என்னை கைவிடலை. வீட்டுக்கு வந்து முட்டிய பார்த்தா, நல்லாவே அடிபட்டிருந்தது. பத்தாகுறைக்கு தோள்பட்டைல வேற காயம். டாக்டர் கிட்ட போய், ரெண்டு ஊசிய போட்டுகிட்டு, காயத்துக்கு கட்டு கட்டிகிட்டு வந்து படுத்துட்டேன். அடுத்த நாள் என் ரூம்மேட், என்னோட தோள்பட்டை காயத்தைப் பார்த்துட்டு, என்னடா குண்டடிபட்ட அரசியல்வாதி மாதிரியே இருக்கியேனு சொல்லி வேற என்னை கடுப்பேத்தறான். அதுமட்டுமில்லாம பதினாறு வயதினிலே சப்பானி மாதிரியே ஒரு நடை.
ஒருநாள் ஆஃபீசுக்கு லீவைப் போட்டுட்டு, செவ்வாய்க்கிழமை போனா, என்ன பாஸ் நாயானு கேக்கறாய்ங்க. அப்புறம் தான் தெரிஞ்சுச்சு, எனக்கு முன்னாடியே, என் டீம்ல நாலு பேர் அதே ரோட்டுல நாயால கீழவிழுந்து சில்லரை எண்ணிருக்காய்ங்கன்னு. ஓ பெங்களூர் வாசிகளே.. நம்ம ரோட்டுல நைட்டு வண்டில வரும்போது பார்த்து வாங்கப்பா. பல நாய்ங்க நம்மளை மண்ணைக்கவ்வ வைக்க அலையுதுங்க.
**********************************
கொஞ்ச நாளாவே என்னோட வெய்ட்டு கட்டுக்கடங்காம ஏறிக்கிட்டே போகுது. சாப்பாட்ட கண்ட்ரோல் பன்னவே முடியல. ஆஃபீஸ் பிசில ஜிம்முக்கும் போறதில்லை. சமீபத்துல டீ.வில ஒரு விளம்பரம் பார்த்திருப்பீங்க. ரின் விளம்பரம். மனம் பிரகாசிக்கும் போது, உடை பிரகாசிக்கக் கூடாதானு. அந்தப் பையன் சொல்லுவான். ரெண்டு டயர்தான் அங்கிள் வித்தியாசம். ஒருநாள் அதுவும் வந்துடும்னு. என்னோட வயித்தப் பார்த்து என்னைக்கு எந்தப் பையன், அதே வார்த்தைய சொல்லப்போறானோ.
**********************************
ஒரு ஆறு மாசம் முன்னாடி, ஆஃபீஸ் ப்ரண்ட்ஸ் கொஞ்சபேர் சேர்ந்து உதயம் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன்னு ஒரு சங்கத்த ஆரம்பிச்சோம். அதன் மூலமா அனாதைக் குழந்தைகளுக்கு உதவி செஞ்சுகிட்டு இருக்கோம். பெங்களுர்ல ஜக்கூர் ஏரியால, வசதியற்ற இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் படிக்க, இந்திரா காந்தி இண்டர்நேஷனல் அசோஷியேஷன்னு ஓரு பள்ளிக்கூடம் இருக்கு. இந்தப் பள்ளியும் ஒரு நான்-ப்ராஃபிடபிள் ஆர்கனைசேஷன் தான். எங்களைப் போன்ற தனியார் அமைப்பின் ஆதரவில் இயங்கும் இந்தப் பள்ளிக்கூடத்தில், போதிய ஆசிரியர்கள் இல்லாததால, வார இறுதி நாட்கள்ல, நாங்க போய் பாடம் நடத்தறோம். ஒருநாள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, கணிதம் எடுக்கச் போனேன். பேங்க் இண்ட்ரஸ்ட் பத்தி நடத்தனும். பசங்களா ஃபார்முலா PNR/100 என்றேன். அண்ணா, நீங்க சொன்ன ஃபார்முலா தப்பு, இங்க இருக்கிற ஃபார்முலா PN/(100R) என்றார்கள் மாணவர்கள். தூக்கிவாரிப் போட்டுச்சு எனக்கு. நாம படிக்கும் போது சி ஃபார் கேட்ச் தானடா என விவேக் சொன்னது போல நாம் படிக்கும் போது PNR/100 தான என யோசிச்சிகிட்டே மறுபடியும் புத்தகத்தைப் பார்த்தா, அது ஏதோ வங்கிக் கணக்கு வட்டியை கண்டுபிடிக்கும் ஃபார்முலா. சிம்பிள் இண்ட்ரஸ்ட் இல்லை. விட்ரா விட்ரா சூனா பானா என ஒருவழியாக நல்ல படியாய் பாடத்தை முடித்துவிட்டு வந்தேன். பசங்க அதை மறந்தாலும், படுபாவிப் பயலுக, என்னோட கூட பாடம் எடுக்க வந்த ப்ரெண்ட்ஸ் அதை மறக்காம, நக்கலு பன்னிகிட்டு திரியிறானுங்க. என்னத்த சொல்ல. என் நேரம்.
**********************************
என்னோட HTC மொபைல் ரிப்பேரானதை ஏற்கனவே வேறொரு பதிவில் நான் புலம்பிவிட்டதால், இத்துடன் என் புலம்பல்களை நிறுத்திக்கொள்கிறேன்.
Comments
நல்ல வேலை எந்த நாய் மாதிரி நானும் இல்ல....என்னை மாதிரி எந்த நாயும் இல்ல...:-))