வஞ்சப்புகழ்ச்சி அணி
வெகு தினங்களுக்கு முன் நான் எழுதிய தற்குறிப்பேற்ற அணி பற்றிய பதிவைப் பலர் பாராட்டினார்கள். அந்த பாராட்டுதல்கள் தான் என்னை மேலும் பல பதிவுகள் எழுதத் துண்டியது. அப்பொழுதே சிலர் வஞ்சப்புகழ்ச்சி அணி பற்றி ஒரு பதிவு எழுத கேட்டுக்கொண்டனர். இதோ அவர்களின் வேண்டுகோளுக்கினங்கி இந்தப் பதிவு.
எனது தற்குறிப்பேற்ற அணி பற்றிய பதிவைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். :)
சரி வஞ்சப்புகழ்ச்சி அணி என்றால் என்ன. அதான் பெயரிலேயே அர்த்தம் இருக்குதே. வஞ்சப்புகழ்ச்சி அணி என்பது ஒரு கவிஞன் தான் கூறவிழைவதைப் புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும். இந்த இரண்டு பகுதிகளையும் சில உதாரணங்களுடன் பார்க்கலாம்.
இகழ்வது போல் புகழ்தல்
பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே
"புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைம்மாறு கருதாமல் கொடுக்கின்றான்? மாரியும்தான் கைம்மாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகம் புரக்கின்றது" என்பது இப்பாடலின் பொருள்.
இது பாரியை இகழ்வது போலத் தோன்றினும், பாரிக்கு நிகராகக் கொடுப்பாரில்லை என்று புகழ்ந்ததே ஆகும்.
ஆனால் இந்த பகுதிக்கு எனக்கு மிகவும் பிடித்த எடுத்துக்காட்டு இதுதான்.இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தில், கவிஞர் பானபத்திர ஓனாண்டி மன்னனைப் பற்றிப் பாடுவது போல் வரும் இந்த பாடல். :))
மன்னா மாமன்னா நீயொரு மாமா மன்னா
பூ மாரி தேன் மாரி நான் பொழியும் நீ ஒரு மொள்ளை மாரி
அரசியலில் நீ ஒரு தெள்ளியதோர் முடிச்சவிக்கி
தேடி வரும் முதியவர்க்கு மூடா
நெடுங்கதவு உன் கதவு
என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு...
எதிர்த்து நிற்கும் எதிரிகளை நீ புண்ணாக்கு
மண்ணோடு மண்ணாக்கு
இந்த உலகத்தை அடை காக்கும் அண்டங் காக்கையே
இந்தப் பாடலுக்கு விளக்கமும் வேண்டுமோ.. :))
புகழ்வது போல் இகழ்தல்
திருக்குறளில் கீழ்வரும் இந்த இரண்டு பாடல்களிலும் ஒருவரை ஆரம்பத்தில் புகழ்வது போலத் தெரிந்தாலும், கடைசியில் அவர்களை இகழ்ந்து அருமையாகப் விளக்கமளித்திருப்பார் வள்ளுவர்.
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
விளக்கம்: கயவர்கள் தம்மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்.
கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதால் இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும்.
கல்லாரும் நனி நல்லர் பல்லார்முன்
சொல்லாது இருக்கப் பெறின்
விளக்கம்: கல்லாதவர்களும் ரொம்ப நல்லவர்கள். எப்பொழுதென்றால், அடுத்தவர்கள் முன்னால் அடக்கி வாசிக்கும்பொழுது.
படிக்காதவர்களும் படிச்சவங்களும் ஒன்று என்பதுபோல் தோன்றினாலும், படிக்காதவங்க தேவையில்லாதவற்றைப் பேசி தங்களைத் தாழ்த்திக் கொள்வார்கள் என்று வள்ளுவர் கூறுகிறார்.
புகழ்வது போல் பழிப்பதற்கு ரொம்ப ஈசியான விளக்கம் வேண்டுமென்றால் இந்த வலைப்பூவை மேய்ந்துபாருங்கள்... :))
நண்பர்களே, பதிவைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டமிடுங்கள். நன்றி.
Comments
i hope these r all in my 10th book