சமீபத்தில் ரசித்தவை - அமானுஷ்யம் பற்றி ஒரு அலசல்


சமீபத்தில்
ரசித்தவை - இந்தத் தலைப்பை இப்பொழுது நான் கொஞ்சம் அதிகமாகவே உபயோகிக்கிறேன் என்றே நினைக்கிறேன். எங்கள் அலுவலக வலைதளத்தில் தொடங்கிய பதிவின் தலைப்பு, இந்த ப்ளாக்'ல் (Blog) உள்ள ஒரு பகுதி என பல இடங்களில் உபயோகிக்கும் இந்தத் தலைப்பில் ஏன் ஒரு தொடர் எழுதக் கூடாது என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஏதுவாக அமைந்தது ஒரு புத்தகம். நான் சமீபத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய "கொலையுதிர் காலம்" என்ற நாவலைப் படித்து ரசித்தேன் என்று சொல்வதற்குப் பதிலாக வியந்தேன் என்று கூறினால் அது மிகையாகாது.

1977'ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்த நாவலில் கம்ப்யூட்டர் (Computer), லேசர் (LASER), ஹோலோக்ராம் (Hologram) என அக்காலத்தின் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி; கதை பின்னப்பட்டிருந்தது சுஜாதா அவர்களின் "Speciality". முக்கியமாக கதையின் அடித்தளத்தை ஆவியா/அறிவியலா என்ற கேள்வியுடன் நகர்த்தியதின் சாமர்த்தியத்தில் என்னால் நாவலைப் படித்து முடிக்காமல் கீழே வைக்கவே தோன்றவில்லை. ஆனால் நான் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்பியது கொலையுதிர் காலம் பற்றி அல்ல. அந்த நாவலைப் படித்ததிலிருந்தே, "Occult Science" எனப்படும் அமானுஷ்யம் மேல் ஒரு ஈர்ப்பு வந்துவிட்டது. அப்படி ஏதாவது புத்தகம் அகப்படுமா என்று தேடிய போதுதான் எனக்கு திரு. மதன் அவர்கள் எழுதிய "மனிதனும் மர்மங்களும்" என்ற புத்தகம் கிடைத்தது. வெறும் நூறு ரூபாய் மதிப்புள்ள இந்தப் புத்தகத்தில்தான் எத்தனை விஷயங்கள். ஆவிகள், பறக்கும்தட்டுகள், வேற்றுக்கிரகவாசிகள் என சகல அமானுஷ்யங்களையும் அலசி ஆராயும் இந்தப் புத்தகம் பற்றி ஒரு சிறு அறிமுகம் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

முன்னரையிலேயே "Weak Hearted" மக்களுக்கு எச்சரிக்கைக்கொடி அசைத்துவிட்டு ஆரம்பிக்கும் இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயமே "Apparitions" எனப்படும் ஆவிகள் பற்றித்தான். உலகில் இந்நாள்வரை பல்வேறு நாட்டு மக்களும் பார்த்த, பயந்த, பழகிய, ஆராய்ந்த ஆவிகளைப்பற்றி குறிப்பிட்டிருந்த முதல் சில அத்தியாயங்களில் லங்காஸ்டர் (Lancaster) ஜெயிலில் வந்த இரட்டை ஆவிகளும், ஹாமில்டன் ப்ளாக்வுட் (Hamilton Blackwood) என்பவர் சந்தித்த ஆவியும் என்னைச் சற்று சில்லிடவைத்தன. இரவு பதினொரு மணிக்கு .சி. அறையில் தனியாக இந்தப் புத்தகத்தை படிப்பது அவசியம்தானா? என எனக்குள் எழுந்த கேள்விக்கு, என் உள்மனம் "ஆணியே புடுங்க வேண்டாம்" எனக் கூறியதால், அமைதியாகப் படுத்துவிட்டேன்.

அதற்குப்பின் வந்த அத்தியாயங்களில் மதன் அவர்கள் நால்வகை ஆவிகளைப்பற்றி உண்மைச் சம்பவங்களுடன் விளக்கிவிட்டு "Extra Sensory Perception (ESP)" எனப்படும் சுவாரஸ்யமான subject'க்குள் நுழைகிறார். இந்த அத்தியாயங்களில் படித்த நூறாவது குரங்கு ஆச்சர்யம் (Hundredth Monkey Phenomenon) எனும் பகுதி நம்மை ஆச்சர்யப்படவைத்தால், எலிகளை வைத்து டாக்டர் ராபர்ட் மாரிஸ் (Robert Morris) நடத்திய பரிசோதனை நம்மைச் சற்று திகிலூட்டத்தான் செய்கிறது. டெலிபதி (Telepathy), என்ற ESP சக்தியை நிரூபிக்கும் இந்த இரண்டு பகுதிகள் அல்லாமல்; மற்ற மூன்று ESP'களான "தொலைவில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் திறன் (Clairvoyance)" "எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை முன் கூட்டியே சொல்லுதல் (Precognition)" மற்றும் "பொருள்களைத் தொடாமல் பார்வையின் சக்தியாலேயே நகர்த்துதல் (Psychokinesis)" போன்றவற்றையும் பின்வரும் அத்தியாயங்களில் அழகாக விளக்குகிறார் மதன்.

அந்த சில பகுதிகளில் என்னைப் பெரிதும் கவர்ந்தது "அடுத்தவர்கள் மனதில் நினைப்பதை (எந்த மொழியானாலும்) தெளிவாகப் படிக்கும் இல்கா கே (Ilga K [Ilga Kirps]) என்னும் சிறுமி", "1503'ல் பிறந்த நாஸ்ட்ரடாமஸ் (Nostradamus) பிற்காலத்தில் உலகில் நிகழப்போகும் போர்களை அப்பொழுதே கணித்திருந்தது", "ஜான் எப் கென்னெடியின் (John F Kennedy) மரணத்தை பத்து ஆண்டுகள் முன்னமே கனவில் பார்த்த ஜீன் டிக்சன் (Jeane Dixon)", "Psychokinesis எனப்படும் பார்வையாலேயே பொருட்களை நகர்த்தும் திறன் பெற்ற டேனியல் டக்லஸ் ஹும் (Daniel Douglas Home [pronounced Hume]) மற்றும் யூரி கெல்லர் (Uri Geller)" போன்றவர்களின் சாதனைகள்தான். இப்படி மனிதர்கள் ஒருபுறம் என்றால் "Down's Syndrome" எனப்படும் நோயை குணப்படுத்தும் டால்பின்கள் (Dolphins), மீன் மழை, தவளை மழை, உடலின் உள்ளே இருந்து எழும் தீயால் மரணம், போன்ற செய்திகள் எல்லாம் எனக்கு முற்றிலும் புதியவை. டெலிபதியை விளக்குவதற்காக "ஒன்பது சக்திகள்" பற்றி மேற்கோள் காட்டியபோது எனக்கு "Indiana Jones and the Kingdom of Crystal Skull" படம் தான் நினைவுக்கு வந்தது. இந்தப் புத்தகத்தில் இருந்து ஒரு சுவையான பகுதியை மட்டும் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.

1825'ஆம் ஆண்டு லண்டனில் அதிகாலையில் அப்பாவுடன் வாக்கிங் போய்க்கொண்டிருந்தான் ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன். எதேச்சையாக தந்தையிடம் அந்தச் சிறுவன் கேட்டான் - "அப்பா என் பர்த்டே எனக்குத் தெரியும். நான் பிறந்த மணி என்ன? கரெக்டாகச் சொல்லுங்கள்". "அதிகாலை சரியாக நாலு மணி" என்றார் தந்தை. "இப்போ சரியாக மணி என்ன?" என்று கேட்டான் மகன். "7.50. ஏன் என்ன விஷயம்" என்று கேட்டார் தந்தை. சில நிமிஷங்கள் கழித்து "அப்படியென்றால் எனக்கு இப்போது 188,352,000 வினாடிகள் வயசாகிறது!" என்றான் அந்தச் சிறுவன் பளீரென்று.

திகைத்துப்போன அப்பா மகன் சொன்ன எண்ணைக் குறித்துவைத்துக் கொண்டார். வீட்டுக்குத் திரும்பியவுடன் முதல் வேளையாக ஒரு பேப்பரில் நிதானமாக கணக்குப் போட்டார். மகனிடம் வந்து "நீ கெட்டிக்காரன் தான். ஆனால் 172,800 வினாடிகள் குறைத்துச் சொல்லியிருக்கிறாய்!" என்றார். புன்னகை புரிந்த சிறுவன் "அப்பா. நீங்கள் தான் தப்பாக கணக்கு போட்டிருக்கிறீர்கள். 1820'ஆம் ஆண்டும் 1824'ஆம் ஆண்டும் லீப் வருஷங்கள். அந்த எக்ஸ்ட்ரா நாள்களைச் சேர்த்துக் கொள்ளாமல் மறந்து விட்டுவிட்டீர்கள்!" என்றான். கணக்கு கரெக்ட். தந்தைக்குத் தலை சுற்றியது. அந்தச் சிறுவனின் பெயர் பெஞ்சமின் ப்ளீத் (Benjamin Blyth).

இறுதி அத்தியாயங்கள் முழுவதும் வேற்றுக்கிரகவாசிகளுக்கு. "Unidentified Flying Object (UFO)" எனப்படும் பறக்கும் தட்டுகள் பற்றியும் "Aliens" எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றியும் பல குறிப்புகளை இந்தப் பக்கங்களில் காணலாம்.

பறவைகள், விலங்குகள் அனைத்தும் பூகம்பம், சூறாவளி, ஏன் ஆவியின் வருகையைக்கூட முன்னமே தெரிந்து கொள்கின்றன. இதற்கு "Precognition" கண்டிப்பாக ஒரு காரணமாக இருக்கலாம். அதுமட்டுமல்லாமல் இவைகள் இரண்டும் தன் மூளையை மனிதனை விட அதிக அளவில் பயன்படுத்துகின்றன. ஆம், சராசரி மனிதன் தன் மூளையில் பத்தில் ஒரு பகுதியைத்தான் உபயோகிக்கிறான். அந்த மீதமுள்ள ஒன்பது பகுதியைப் பயன்படுத்தினால் சராசரி மனிதனால் கூட இந்த "ESP", ஆவிகள் பற்றிப் புரிந்துகொள்ள முடியும். யாருக்குத் தெரியும்? அட்லீஸ்ட் நாம் இந்த ஒரு பகுதியையாவது பிறர்க்கு உதவி புரிந்து உபயோகமாகப் பயன்படுத்தக் கடவ. அதற்கு மேல் பயன்படுத்த முயல்வோர்க்கு இந்தப் புத்தகம் ஒரு "MUST READ".

Comments

KingMaker said…
Andha booka konjam enakkum kodunga partner...padichittu thandhuduren..padikkanum pola irukku...

unga anubavum romba romba superu..
Unknown said…
நானும் படித்திருக்கிறேன்...

நல்ல புத்தகம்.

நன்றி.

pls remove word verification.
அக்கிலீஸ்,

unga blogum sujatha novel mathiri thaan irukku! onnu padikka aarambicha pothum, close pannave mudiyalai..

nadathunga :)

Popular Posts